முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விஜித ஹேரதுடன் கலந்துரையாடல்
முஸ்லிம் சிவில் அமைப்புகளின் தலைவர்களுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இன்று (30.04.2025)இடம்பெற்றது. முஸ்லிம் சமூகம் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புதிய அரசாங்கத்தின் கீழ் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதே இதன் நோக்கமாக அமைந்தது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர் விஜித ஹேரத், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லாம் ஆகியோர் கலந்துகொண்டதுடன், சுமார் 30 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.
புதிய அரசாங்கத்தின் கொள்கை தேசிய ஒருமைப்பாடு எனவும், இனங்களுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்தவோ அல்லது எந்தவொரு தரப்பினரையும் இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடவோ அரசாங்கம் இடமளிக்காது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் இனம், மதம் அல்லது வேறுபாடுகளைப் பாராது சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் உணர்வுபூர்வமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், எந்தவொரு சமூகம் தொடர்பிலும் தீர்மானங்களை எடுக்கும்போது சம்பந்தப்பட்ட சமூகத்தின் கோரிக்கைகள் மற்றும் குரலுக்கு செவிசாய்ப்பது அரசாங்கத்தின் கொள்கை எனவும் தெரிவித்தார்.
பலஸ்தீன மக்கள் தொடர்பில் எதிர்க்கட்சியில் இருந்தபோது தாங்கள் மேற்கொண்ட செயற்பாடுகளில் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும், அரச அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் இராஜதந்திர ரீதியில் பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக தலையீடு செய்து வருவதாகவும் அமைச்சர் முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் தெரிவித்தார்.
முஸ்லிம் சிவில் அமைப்புகளின் தலைவர்களுடன் இவ்வாறான கலந்துரையாடல்களை எதிர்காலத்திலும் நடத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
Comments (0)
Facebook Comments (0)