சவூதி தூதுவரின் பங்கேற்புடன் முதலாவது ஹஜ் குழு வழியனுப்பல்
புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான இலங்கையின் முதலாவது ஹஜ் குழு இன்று (11) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
நாற்பத்தி ஆறு ஹாஜிகளைக் கொண்ட இந்தக் குழுவினை வழியனுப்பும் நிகழ்வு விமான நிலையத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"அனைத்து உலக முஸ்லிம்களாலும் போற்றி விரும்பப்படுகின்ற இஸ்லாத்தின் ஐந்தாவது முக்கிய கடமையான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கி பயணிக்கின்ற முதல் குழுவை வழியனுப்பும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முக்கிய நிகழ்வில், உங்களுடன் இணைந்து கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் சவூதி அரேபிய அரசாங்கம், ஹஜ்ஜுக்காக வரும் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்குப் பணியாற்றுவதில் முழுமொத்த பங்களிப்பையும் தவறவிடாமல் செயல்பட்டு வருகிறது.
ஹஜ் யாத்திரிகர்கள் சவூதிக்குள் வந்ததிலிருந்து நாட்டுக்கு திரும்பும் வரை அனுபவிக்கும் நலன், பாதுகாப்பு மற்றும் வசதிகளை உருதிப்படுத்துவதற்கு நாட்டின் அனைத்து வளங்களையும் சவூதி அரசாங்கம் பயன்படுத்துகிறது.
இந்த ஆண்டு ஹஜ் பருவத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சவூதி அரேபிய இராச்சியத்துடன் தொடர்புடைய நிறுவனங்களால் முழுமையாக பூரணப்படுத்தப்பட்டுள்ளன.
யாத்திரிகர்கள் பாதுகாப்பாக, அமைதியான முறையிலும் ஆன்மிக ரீதியாக நிறைவுபெறும் வகையிலும் ஹஜ் கடமையை நிறைவேற்றக்கூடிய சூழலை உருவாக்குவதற்காக, சுகாதாரம், ஒழுங்கமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்புகள் சிறப்பாக நடைபெறுவதற்காக, சவூதி அரேபிய இராச்சியம் மற்றும் இலங்கையின் அதிகாரிகள் வழங்கிய பயனுள்ள ஒத்துழைப்புக்கு இதயம் கனிந்த பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.
இந்த ஒத்துழைப்பு, எமது இரு நாடுகளுக்கு இடையிலான உறுதியான மற்றும் நட்பான உறவுகளை பிரதிபலிப்பதாக அமைகிறது. எனவே இறுதியாக ஹஜ்ஜுக்காக செல்கின்ற அனைத்து யாத்ரிகர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் அனைவரது ஹஜ்ஜையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு, எல்லோரது பாவங்களையும் மன்னித்து, பத்திரமாக திரும்பிவர அல்லாஹ் அருள்புரியட்டும் என்றும் நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். அல்லாஹ் எமது நாடுகளை அமைதியாலும் வளமையாலும் தொடர்ந்தும் அருள்புரியட்டும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)