இலங்கையின் முதலாவது ஹஜ் குழுவினை விமான நிலையத்தில் வரவேற்ற தூதுவர்

இலங்கையின் முதலாவது ஹஜ் குழுவினை விமான நிலையத்தில் வரவேற்ற தூதுவர்

புனித ஹஜ் கடமையை இந்த வருடம் நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து சென்ற முதலாவது யாத்திரிகர் குழு நேற்று (11) ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபியாவை சென்றடைந்தது.

ஜித்தாவிலுள்ள மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தினைச் சென்றடைந்த 46 யாத்திரிகர்களைக் கொண்ட இக்குழுவை சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மற்றும் ஜித்தாவிலுள்ள பதில் கொன்சல் ஜெனரல் மபூஸா லாபிர் ஆகியோர் சிறப்பான வரவேற்பளித்தனர்.

இந்நிகழ்வின் போது புனித ஹஜ் யாத்திரிகர்களுக்கு 'ஸம்ஸம்' நீர் மற்றும் 'அஜ்வா' பேரீத்தம்பழம் என்பவற்றை வழங்கி வரவேற்ற தூதுவர் அமீர் அஜ்வத், அனைத்து ஹாஜிகளுக்கும் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் புனித ஹஜ் கடமையின் ஆன்மீக முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தூதுவர், இங்கு வருகை தந்திருக்கின்ற புனித யாத்திரிகர்கள் அனைவரும் தமது ஹஜ் கடமையை சுமுகமான முறையில் பாதுகாப்பாகவும் ஆன்மீக ரீதியான உணர்வுடனும் நிறைவேற்றுவதற்கு அவசியமான அனைத்து வகையான உதவிகள் மற்றும் ஆதரவுகளையும் ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜித்தாவில் உள்ள கொன்சல் ஜெனரல் அலுவலகம் என்பன இணைந்து மேற்கொள்ளும் எனவும்  உறுதியளித்தார்.

இங்கு வருகை தந்திருக்கின்ற புனித ஹஜ் யாத்திரிகர்கள் அனைவரும் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான வழிகாட்டல்களையும் தமது சொந்த பாதுகாப்பு மற்றும் நலன் என்பவற்றை கருத்திற் கொண்டு பேணி நடக்க வேண்டும் எனவும் தூதுவர் வேண்டிக்கொண்டார்.

இவ்வாண்டு இலங்கையிலிருந்து மொத்தமாக 3, 500 ஹஜ் யாத்திரிகர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு இலங்கை ஹஜ் குழு, சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு, நியமிக்கப்பட்ட சவுதி சேவை வழங்குநர்கள் மற்றும் உள்ளூர் பயண ஏற்பாட்டாளர்கள் போன்ற பலரும்  இணைந்து செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.